Friday, December 30, 2011

புதிய ஆண்டில் வெற்றிபெற...

புதிய ஆண்டு பிறக்கும் போது, நம் எல்லாருடைய மனதிலுமே ஆயிரம் ஆயிரம் ஆசைகளும், கனவுகளும் பிறக்கின்றன. புதிய ஆண்டிலே இப்படியெல்லாம் வாழவேண்டும் என்ற ஆசைகள் பிறக்காத மனிதர்கள் இருக்கமுடியாது. ஆனால் அந்த ஆசைகளையெல்லாம் நிஜமாக்கிக் காட்டுபவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்?

புதிய ஆண்டு பிறக்கும் போது, பள்ளியில் பயிலும் பல இளையோருக்கும், வருகின்ற ஆண்டுப் பொதுத்தேர்விலே மாநிலத்திலேயே முதலிடம் பெறவேண்டும் என ஆசைப் பிறக்கிறது. பணியாற்றுவோருக்கு, பணியாற்றும் இடங்களிலே அன்போடும், அமைதியோடும் பிறருக்கு உதவ வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. குடும்பத்திலுள்ளவர்களுக்கு, இந்த வருஷம் சம்பாதிப்பதை கொஞ்சமாவது சேர்த்து வைக்க வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. இன்னும் சிலருக்கு, இந்த புதிய வருஷத்துல குடும்பத்தினரோடு, உடன்பிறந்தவர்களோடு, உற்றார் உறவினர்கள், நண்பர்களோடு, சண்டை, சச்சரவு இல்லாத நல்ல உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப் பிறக்கிறது. நமக்கு இருக்கிற எல்லா கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டுவிட்டு புதிய மனிதர்களாக வாழவேண்டும் எனவும் சிலருக்கு ஆசைப் பிறக்கிறது. புதிய ஆண்டு பிறக்கும் போது, இப்படி எண்ணற்ற ஆசைகளும், கனவுகளும் நம்மிலே பிறக்கின்றன. அந்த கனவுகளையெல்லாம் நம்மில் எத்தனை பேர் நனவாக்குகிறோம்? நமது ஆசைகளையெல்லாம் எத்தனை பேர் நிஜங்களாக மாற்றுகிறோம்? ஆசைப்பட்டுவிட்டால் மட்டும் நாம் நினைப்பதை அடைந்துவிட முடியாது. மாறாக அவற்றை அடைவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அதற்கு முதலில் திட்டமிட வேண்டும். திட்டமிட்டுவிட்டால் மட்டும் போதுமா? போதாது.

திட்டமிட்டதெல்லாம் அப்படியே நடந்து விட வேண்டும் என்ற அவசியமில்லை. திட்டமிட்டதெல்லாம் அப்படியே நடந்துவிடுமென்றால், வரலாறு முழுவதுமே வெற்றிப் பக்கங்களாகத்தான் இருக்கும். ஆனால் வரலாறு அப்படியில்லையே? வெகுசில மனிதர்கள் தான் வரலாற்றிலும், மனித மனங்களிலும் நீங்காத இடம்பிடித்திருக்கிறார்கள். அவர்கள்தான் கனவுகளை நனவாக்கியவர்கள். அவர்களைப் பற்றித்தான் வாழ்ந்தவர் வழியில் என்ற நிகழ்ச்சியில் நாள்தோறும் கேட்கிறோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க மனிதர்கள், கனவுகளை நனவாக்கியதற்கு பின்னால் எத்தனை தோல்விகள், எத்தனை வலி, வருத்தங்கள், வேதனைகள் என்பதை மறந்து விடுகிறோம். 


தாமஸ் ஆல்வா எடிசன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒலிப்பதிவுக் கருவி, திரைப்படம் எடுக்கும் கருவி, மின்விளக்கு என 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். இவரது வெற்றிக்குப் பின்னால் எத்தனை, எத்தனைத் தோல்விகள் இருந்தன. ஆனால் எடிசனோ, “ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டு” என்றார். “ஒவ்வொரு முறையும் தோற்கும்போது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என கற்றுக்கொண்டேன்” என்றும் சொன்னாராம். அவர் அடைந்த அனைத்துத் தோல்விகளும் சேர்ந்து, அவரது முயற்சியைத் தோற்கடிக்க முடியவில்லை. எனவேதான் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதராகத் திகழ்கிறார்.

‘முயற்சித் திருவினையாக்கும்’ என்பதற்கு கஜினி முகமது, எடிசன் என பலரை உதாரணங்களாகச் சொல்லலாம். அவர்களைப் போல வெற்றிகளைச் சுவைக்க ஆசைப்படும் நாம், அவர்களைப் போல கடினமாக உழைக்க வேண்டும், எத்தனை தோல்விகள் அடைந்தாலும் மீண்டும் முயற்சிச் செய்ய வேண்டும் என்ற பாடங்களை அவ்வளவாக உள்வாங்குவதில்லை.

வெற்றிபெற்றவர்களின் வரலாறுகளைக் கேட்கும்போது நம்மில் நம்பிக்கை பிறக்கிறது. நாமும் அவ்வாறு வாழ வேண்டும் என முடிவெடுக்கிறோம். ஆனால் அதற்கான வழிமுறைகளைச் சிலரே சிந்திக்கின்றோம். அவ்வழிகளில் முன்னேறிச்செல்கின்றவர்கள், பாதையிலே தடைகள் வரும்போது சிலர் தடுமாறிவிடுகிறோம், சிலர் பின்வாங்கிவிடுகிறோம். வெகு சிலரே, தடைகளையும் மீறி, இலட்சியத்தில் நிலைத்திருந்து, இறுதி இலக்கை அடைகிறோம். 


நாம் நினைத்தவாறு, ஆசைப்பட்டவாறு நம் கனவுகளை நினைவாக்க, நாம் பின்பற்ற வேண்டிய இன்னொன்றை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். “புதிய ஆண்டிலே என்ன புதிய முடிவு எடுத்திருக்கிறாய்” என்று கேட்டால், மிக நீண்ட பட்டியலை கொடுக்கக்கூடாது. நாம் சாதிக்க விழைபவைகளில் முக்கியமானதை நாம் தேர்ந்துத் தெளிய வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணி 5ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா முதல் 3 போட்டிகளை வென்றபின், அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியிடம், 5 போட்டிகளையும் வெல்வதுதான் உங்கள் திட்டமா என்று கேட்கும்போதெல்லாம், “நாங்கள் அடுத்த ஒரு போட்டி மீது மட்டும் தான் இப்போதைக்கு கவனம் செலுத்துகிறோம்” என்றுதான் சொல்வார். அகலக்கால் வைக்கக் கூடாது என்பதைத்தான் இது நமக்குச் சொல்கிறது. ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்து உலகச் சாதனைப் படைத்தவர் வீரேந்திர சேவாக் அவர் 219ரன்கள் எடுத்தார். இது அவரது ஆசையால் மட்டும் விளைந்ததல்ல. மாறாக அவரது திட்டமிடுதலும், கடின உழைப்பும், முயற்சியுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

துவங்கியிருக்கிற புதிய ஆண்டில் நமது வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஒரு காரியத்தை மட்டும் எடுத்து அதிலே வெற்றிபெற முயற்சி செய்வோம். இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக நம் கனவுகளை நனவாக்குவோம்.


No comments:

Post a Comment