Friday, December 30, 2011

இன்று யார் நேர்மையாளர்கள்?

இன்று நேர்மை என்றால் என்ன? யார் நேர்மையாளர்கள்?

எதையும் மறைக்காமல் திறந்த மனதோடு நபர்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி உண்மையாக பேசுவதும் அதன்படி செயல்படுவதுமே நேர்மையெனப்படும். ஆனால் இன்றைய நேர்மை எப்படி இருக்கிறது?

எனக்கு நன்கு பழக்கமான இளைஞன் ஒருவர், இளங்கலை இயற்பியல் படித்து, பிறகு ஆசிரியர் பயிற்சி பெற்றார். தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து கொண்டே, தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை இயற்பியல் படித்தார். நன்கு படிக்கக் கூடியவர். ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறாமல் இருந்ததில்லை. முதுகலை முதல் ஆண்டுத்தேர்விலே முதன்முறையாக ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. நன்கு படித்தேன், நன்கு எழுதினேன். ஆனால் முடிவு இப்படி இருக்கிறது என்று வேதனைப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல், மேலும் நன்கு படித்து, அடுத்த ஆண்டு தேர்ச்சி பெறாத பாடத்தை எழுதினார். மீண்டும் தேர்ச்சி பெறவில்லை. அதிர்ச்சி அடைந்தார். மனம் உடைந்து போனார். ஆனால் நண்பர்கள் அவரைத் தேற்றினர். தொலைதூரக்கல்வியிலே இதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் தேர்ச்சி பெற்றவாறு சான்றிதழ் வாங்கிவிடலாம் என்று சொன்னார்கள். அந்த மாணவருடைய பெற்றோரும் பணத்தைக் கட்டித் தேர்ச்சி பெற்றவாறு சான்றிதழைப் பெற்றுவிட்டனர். இதுதான் இன்றைய நேர்மை.



உண்மைக்கே காலம் இல்லை, உண்மையா இருந்தா, இந்த உலகத்துல வாழமுடியாது. நல்லவனுக்கு நல்லவனாக இருக்கணும், ஏமாற்றுப்பேர்வழிகளை, அவர்கள் வழியிலேயே சென்று ஏமாற்ற வேண்டும். இப்படி வாழ்பவர்களைத்தான் இந்த உலகமும் புத்திசாலி என்று ஏற்றுக் கொள்கிறது, பாராட்டுகிறது. இன்று தொலைதூரக் கல்வி பயில்வோர் தேர்வு மையங்களிலே புத்தகம் வைத்து, பார்த்து எழுதுவது சகஜமாகிவிட்டது. “யார் தான் இன்னிக்கு லஞ்சம் வாங்கல” என்று லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. இன்று கணிணி உலகில் புதிதாக வரும் மென்பொருள்களை (Software) முறையாக காசு கொடுத்து வாங்காமல் முறையில்லாமல் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துவிட்டு “நான் எந்த மென்பொருளையுமே (Software) காசு கொடுத்து வாங்குவதில்லை” எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதும் தான் இன்றைய நேர்மையின் மறுபக்கங்கள். இவ்வாறு தவறுகள் நியாயப்படுத்தப்பட்டு, அது சரிதான், நியாயம்தான், நேர்மைதான் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதுதான் மிகவும் வருத்தத்துக்குரியது.



இதைப்பற்றிப் பேசுகின்ற போது எனக்கு ஒரு நெருடல் ஏற்படுகிறது. “இதெல்லாம் பேச நல்லாயிருக்கும், ஆனா வாழ்க்கையில நடக்குமா” என்ற ஒரு நெருடல்தான். ஏன் இந்த நெருடல்? “இந்த உலகத்துல இப்படித்தான் வாழணும், இல்லன்னா வாழ முடியாது” என்று நம் மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டது. இதையும் தாண்டி, இதையெல்லாம் தீமை என்று யார் சொன்னது? என்ற கேள்வி கேட்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். 


ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறோம்? ஏனெனில், நாம் நீண்ட கால பயன்களையும், விளைவுகளையும் யோசிப்பதில்லை. யோசிக்கவும் விரும்புவதில்லை. அதற்கு நேரமுமில்லை. ஏனெனில், எல்லாமே அவசரம் தான். இந்த அவசர உலகத்தில் அப்பப்ப, அதுஅது, நடந்தா போதும். இப்போதைக்கு நாம் விரும்புவதை அடைய நேர்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. “நம்ம மட்டும் நேர்மையா இருந்து, என்ன செஞ்சுட போறோம்? நாமாக நேர்மை தவறவில்லை. எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். எனவே, ஊரோடு ஒத்துப்போ” என்பதைப்போல வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நீண்ட கால ஓட்டத்தில் நாமே நினைத்தாலும் நம்மால் நேர்மையாக வாழமுடியாது. ஏனெனில் நமது சிந்தனைகளும், செயல்களும் நேர்மை என்பதற்கு பதிலாக மாற்றுக்கருத்தாக்கத்தை நம்மிலே ஏற்படுத்திவிடும். நீண்டகாலத்திற்கு பிறகு, ‘வாய்மை வெல்லும்’, ‘நேர்மையாளர்களை இறைவன் கைவிடமாட்டார்’ என்பதெல்லாம் நமது மனதை விட்டு மட்டுமல்ல மாறாக நாம் வாழும் சமூகத்திலிருந்தே வெளியேறி இருக்கும்.

தனி ஒருவரின் நேர்மையே இந்த உலகம் நேர்மையாக மாறுவதற்கு முதல்படி. முதல்படியை யார் எடுத்து வைப்பது?


No comments:

Post a Comment