Tuesday, November 29, 2011

சம்பாதிப்பது எதற்கு?

வெளிநாட்டுக்காரர்களைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. ஏனென்றால் வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தின் இறுதிநாள், எங்காவது சுற்றுலாதளம் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்று, உண்டு களித்து நேரத்தையும், வாரம் முழுவதும்  உழைத்துச் சேர்த்த பணத்தை மகிழ்ச்சியாக செலவழித்து, களைப்பு நீங்கி அடுத்தவாரத்தில் உற்சாகமாக நுழைகிறார்கள்.



ஆனா நம்ம ஊர்ல என்ன நடக்குது? வாரம் முழுவதும் வேலைசெய்து, உடல் சோர்ந்து போய் இருந்தாலும் கூட, ஓய்வுநாளன்று இருமடங்கு ஊதியம் கிடைக்கும் என்று ஓய்வு கூட எடுக்காமல் உழைக்கிறோம். அப்படி ஓய்வில்லாமல் உழைத்துச் சம்பாதிப்பது எதற்காக? சேர்த்து வைக்கத்தான். சேர்த்து வைப்பது எதற்காக? நன்கு வாழ்வதற்காகத்தான். கஷ்டப்பட்ட சம்பாதித்துச் சேர்த்த  பணத்தை நமது மகிழ்ச்சிக்காக பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சம்பாதிப்பதன் அடிப்படை நோக்கம் என்ன? அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றோடு வசதியாக வாழத்தான். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியைப் போன்று, சம்பாதிப்பதன் நோக்கமும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. எதிர்கால வாழ்விற்காக, சமூகத்தில் ஒர் அந்தஸ்தோடு வாழ, உறவினர்களோடு, பக்கத்து வீட்டுகாரர்களோடு போட்டி போட, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என சம்பாதிப்பதன் நோக்கத்தை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எனினும் சம்பாதிப்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்குத்தான் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற கருத்து. 



முன்பொரு காலத்தில் சோம்பேறிகளாக வீட்டில் முடங்கிக்கிடக்கக் கூடாது. உழைத்துச் சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் எல்லாவித வசதிகளோடு மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று கற்பிக்கப்பட்டது. இன்று பெரும்பாலும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது சம்பாதிக்கவும் செய்கிறோம். ஆனால் சம்பாதிப்பதன் நோக்கத்தில் ஒரு தேக்கநிலை உருவாகிவிட்டதெனக் கருதுகிறேன். இப்போது நமக்குத் தெரிந்தவையெல்லாம் சம்பாதிப்பது மற்றும் சேர்த்து வைப்பதுதான். அடுத்த நிலைக்கு கடந்து சென்று அவற்றை செலவழித்து மகிழ்ச்சியாக வாழ்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.



முன்பொருகாலத்தில் வயது முதிர்ந்தகாலத்தில் நமது பராமரிப்பிற்காக சேர்த்து வைக்கவேண்டி இருந்தது. ஆனால் இன்று பல்வேறு ஆயுள்காப்பீடுகள் செயல்பாட்டில் உள்ளன. எனினும் சேர்த்து வைக்கும் மனநிலையிலிருந்து நம்மால் மீண்டுவரமுடியவில்லை. சேர்த்து வைப்பது ஒரு நோயாக நம்மைப் பற்றிக் கொண்டதோ என்ற ஐயமும் பயமும் என்னில் எழுகின்றன.

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டபிறகு, சம்பாதிக்கும் பணத்தை பயனள்ள வகையில் செலவிட்டு  நாமும் மகிழ்ச்சியடைய வேண்டும். பிறருடைய மகிழ்ச்சிக்கும் அவற்றைப் பயன்படுத்தும் போது நமது மகிழ்ச்சி இரட்டிப்படைகின்றது.

Monday, November 28, 2011

முல்லைப் பெரியார் - வஞ்சிக்கப்படும் தமிழர்கள்

முல்லைப் பெரியார் அணை விவகாரத்திலே பிரதமர் தலையிட வேண்டும் எனக்கூறி, இன்று பாரளுமன்றப் பிரதிநிதிகள், பாரளுமன்றத்தின் முன் தர்ணா செய்தனர். கேரள மக்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் போக்கைக் கண்டிக்க வேண்டும் எனவும், கேரளக்காங்கிரஸ் மற்றும் மார்க். கம்யூனிஸ்ட் பாரளுமன்றப் பிரதிநிதிகள் பாரளுமன்றத்தின் முன் தர்ணா செய்தனர்.செய்தி 



இந்த முல்லைப் பெரியார் அணை குறித்து கேரளா முழுவதும், கிராமங்கள் தோறும் குறும்படங்கள் காண்பித்து ஆதரவு திரட்டிவருகின்றனர். மத்திய அரசு தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைக்க, இன்று கேரள முழுவதும் முழுக்கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையாகவே இந்த விவிகாரத்தில் வஞ்சிக்கப்படுவது தமிழர்கள்தான். இதற்கு ஆதாரம் இதோ: இது 45 நிமிட வீடியோ. வஞ்சிப்படும் தமிழர்களுக்காக ஒதுக்கலாமே?

இதைத் தெரிந்த கொண்ட நாம், நம் மக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டியது தமிழர்களாகிய நமது கடைமை. நம்மால் முழந்த வரை தெரியப்படுத்துவோம்.

Sunday, November 27, 2011

கல்வி எதற்கு?


நம்ம ஊர்ல படிக்கிற பசங்கள பாத்து, 'தம்பி என்ன படிக்கிறன்னு கேட்கறத விட, எதுக்குடா படிக்கிற' (பிற்காலத்தில் என்ன வேலை பார்க்கபோகிறாய்) என்ற கேள்விதான் அதிகமாகக் கேட்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான பதில்கள் டாக்டராக அல்லது என்ஜுனியர் ஆகப்போகிறேன் என்றுதான் வருகின்றன.
அப்படியானால் கல்வி எதற்கு? நன்றாகப் படிக்கவேண்டும் என்று சொல்லி வளர்ப்பது எதற்கு? பணியாற்றவா? டாக்டராக அல்லது என்ஜுனியராக பணியாற்றி கை நிறைய சம்பாதிக்கவா? இதற்கான பதிலும் ஆமாம் என்பதைப் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. அப்படியானால், கல்வி என்பது சம்பாதிப்பதற்கா?

அடிப்படையிலே, கல்வி என்பது கற்று, அறிந்து கொள்வதற்குத்தான். அதனுடைய முதன்மை நோக்கமே கற்றல்தான். அறிந்து கொள்வதுதான் கல்வியின் முதற்குறிக்கோள். முறைப்படி சிந்திப்பதற்கும், சிந்தனைகளைச் சீராக ஒழுங்குபடுத்தி, இறுதிமுடிவுக்கு வருவதற்கும் கல்வி பயன்படுகிறது என்பது மனிதஇனம் அனுபவத்தால் அறிந்துகொண்ட உண்மை. கல்வி என்பது மனிதமனங்களை ஒரிடத்தில் நிறுத்தி, ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்ல ஊன்றுகோலாக உள்ளது. 

நம் நாட்டில் காரண காரியத்திற்காகத்தான் படிப்பு என்ற நிலை தொடர்கிறது. பள்ளியில் தேர்வு எழுதவேண்டுமா? படிக்கலாம். அலுவலகத்தில் பணியில் அமர வேண்டுமா? படிக்கலாம். சும்மா எதற்காகப் படிக்கவேண்டும?; என்ற மனநிலைக் காணப்படுவதை நாம் அறிவோம். பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளும் தவிர, நம்நாட்டில் எங்காவது யாராவது படிப்பதைப் பார்க்கமுடிகிறதா? இல்லை. ஏனெனில் கல்வி என்பது தேவைக்காகக் கற்கப்படுவதாகவும், அதன் தேவை முடிந்ததும் தூக்கிஎறியப்படும் காரியமாக இருக்கிறது. 

ஆனால் மேலைநாடுகளில் பேருந்தில் செல்லும் போதும், இரயிலில் செல்லும்போதும் கூட படிக்கிறார்கள். அவர்கள் படிப்பது பாடப்புத்தகமல்ல. தேர்வுக்குச் செல்;லும் அவசர நேரத்தில் படிக்கிறவர்களுமல்ல. நேரம் கழிய வேண்டும், அதோடு இந்த நேரத்தை பயனள்ளதை அறிந்து கொள்ள பயன்படுத்தலாமே என்ற எண்ணத்தில் படிக்கிறார்கள். மேலைநாட்டினர் உலகைத் தெரிந்து கொள்ள கல்வி அவசியமென நன்கு உணர்ந்திருக்கிறார்கள். (சும்மாவா சொன்னாங்க கல்வி கண் போன்றதென்று). மேலை நாடுகளில், நன்கு ஆண்டு அனுபவித்த முதியோர்கள் கூட எதாவது வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் கல்வி அவர்களது உலகை விரிவாக்குகிறது என்பதை தங்கள் அனுபவத்தால் உணர்ந்திருக்கிறார்கள். 

ஆனால் நம்நாட்டில், சிறுவயதிலிருந்தே கல்வி என்பது விஷத்தைப்போல வெறுத்து ஒதுக்கப்படுகிறது. பணியாற்றுவதற்கும், நன்கு சம்பாதிக்கவும் கல்வி தேவை. எனவே கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்ற மனநிலைக்; காணப்படுகிறது. உலகை அறிந்து கொள்ள கல்வி ஓர் ஆயுதம் என்ற மனநிலையில்லை. எனவேதான் கல்வி நமக்கு கசக்கிறது
நம்மிடையே இருக்கின்ற கல்வி பயிலாத பெற்றோர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு கல்வி என்பது அவசியம். அது இல்லாமல், ஒரு இடத்திற்கு செல்லவேண்டுமானால் எந்த பேருந்து என்பதை அறிந்துகொள்ள கூட பிறர் உதவியை நாட வேண்டியிருக்கிறது என்பதை தங்கள் அனுபவம் மூலம் சொல்;லிக் கொடுகிறார்கள். இப்படி கல்வி என்பது கண் போன்றது என்று சொல்ல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கணிணிக்கு எப்படி மென்பொருள் அவசியமோ, அதே போல மனிதர்களுக்குக் கல்வி அவசியம். கணிணியில் மென்பொருள் இருந்தால்தான் நாம் நினைக்கின்ற விஷயங்களைச் செய்யமுடியும். அதே போல கல்வி இருந்தால்தான் இவ்வுலகையே தெரிந்துகொள்ள முடியும். எல்லா மனிதர்களும் உடல்நிலையைப் பேணிக்காப்பது போல, பெண்கள் உடலழகைப் பேணிக்காக்க மெனக்கெடுவதைப்போல கல்விக்கும் முக்;கியத்துவம் கொடுக்கவேண்டும். அது நமது உலகை விரிவாக்கும். இப்படிப்பட்ட கல்வி, அறிவில் மட்டும் வளர்பவர்களாக இல்லாமல் சிறந்த மனிதர்களாக நம்மை உருவாக்கிறது என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

20, 30 ஆண்டுகளுக்கு முன்பு நன்கு சம்பாதிக்க வேண்டுமெனில் கல்வி தேவையென சொல்லி, கல்வி அறிவை வளர்த்தோம். இப்போது ஏறக்குறைய எல்லாரும் படிக்க வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது, படிக்கிறோம். பாராட்டுக்குரியது. இன்றைய தலைமுறையிலே ஏறக்குறைய எல்;லாருமே கல்வி கற்கின்றார்கள். இச்சூழலில்;, கல்வி என்பது பணியாற்ற மட்டும் தான், நல்லதொரு பணியிலமர்ந்ததும் தேவையில்லை என்ற தவறான கருத்தை மாற்றி, கல்வி என்பதன் முதன்மை நோக்கமே அறிந்து கொள்ளதுதான். எனவே கற்றலுக்கும், அறிந்து கொள்வதற்கும் வயதுமில்லை, காலமுமில்லை வாழ்க்கை முடிகிற வரைக்கும் கற்றுக்கொண்டே இருக்கலாம் என்ற மாற்றுச் சிந்தனையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.