Tuesday, November 29, 2011

சம்பாதிப்பது எதற்கு?

வெளிநாட்டுக்காரர்களைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. ஏனென்றால் வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தின் இறுதிநாள், எங்காவது சுற்றுலாதளம் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்று, உண்டு களித்து நேரத்தையும், வாரம் முழுவதும்  உழைத்துச் சேர்த்த பணத்தை மகிழ்ச்சியாக செலவழித்து, களைப்பு நீங்கி அடுத்தவாரத்தில் உற்சாகமாக நுழைகிறார்கள்.



ஆனா நம்ம ஊர்ல என்ன நடக்குது? வாரம் முழுவதும் வேலைசெய்து, உடல் சோர்ந்து போய் இருந்தாலும் கூட, ஓய்வுநாளன்று இருமடங்கு ஊதியம் கிடைக்கும் என்று ஓய்வு கூட எடுக்காமல் உழைக்கிறோம். அப்படி ஓய்வில்லாமல் உழைத்துச் சம்பாதிப்பது எதற்காக? சேர்த்து வைக்கத்தான். சேர்த்து வைப்பது எதற்காக? நன்கு வாழ்வதற்காகத்தான். கஷ்டப்பட்ட சம்பாதித்துச் சேர்த்த  பணத்தை நமது மகிழ்ச்சிக்காக பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சம்பாதிப்பதன் அடிப்படை நோக்கம் என்ன? அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றோடு வசதியாக வாழத்தான். மனிதர்களின் பரிணாம வளர்ச்சியைப் போன்று, சம்பாதிப்பதன் நோக்கமும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. எதிர்கால வாழ்விற்காக, சமூகத்தில் ஒர் அந்தஸ்தோடு வாழ, உறவினர்களோடு, பக்கத்து வீட்டுகாரர்களோடு போட்டி போட, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என சம்பாதிப்பதன் நோக்கத்தை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எனினும் சம்பாதிப்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்குத்தான் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற கருத்து. 



முன்பொரு காலத்தில் சோம்பேறிகளாக வீட்டில் முடங்கிக்கிடக்கக் கூடாது. உழைத்துச் சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் எல்லாவித வசதிகளோடு மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று கற்பிக்கப்பட்டது. இன்று பெரும்பாலும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது சம்பாதிக்கவும் செய்கிறோம். ஆனால் சம்பாதிப்பதன் நோக்கத்தில் ஒரு தேக்கநிலை உருவாகிவிட்டதெனக் கருதுகிறேன். இப்போது நமக்குத் தெரிந்தவையெல்லாம் சம்பாதிப்பது மற்றும் சேர்த்து வைப்பதுதான். அடுத்த நிலைக்கு கடந்து சென்று அவற்றை செலவழித்து மகிழ்ச்சியாக வாழ்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.



முன்பொருகாலத்தில் வயது முதிர்ந்தகாலத்தில் நமது பராமரிப்பிற்காக சேர்த்து வைக்கவேண்டி இருந்தது. ஆனால் இன்று பல்வேறு ஆயுள்காப்பீடுகள் செயல்பாட்டில் உள்ளன. எனினும் சேர்த்து வைக்கும் மனநிலையிலிருந்து நம்மால் மீண்டுவரமுடியவில்லை. சேர்த்து வைப்பது ஒரு நோயாக நம்மைப் பற்றிக் கொண்டதோ என்ற ஐயமும் பயமும் என்னில் எழுகின்றன.

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டபிறகு, சம்பாதிக்கும் பணத்தை பயனள்ள வகையில் செலவிட்டு  நாமும் மகிழ்ச்சியடைய வேண்டும். பிறருடைய மகிழ்ச்சிக்கும் அவற்றைப் பயன்படுத்தும் போது நமது மகிழ்ச்சி இரட்டிப்படைகின்றது.

1 comment:

  1. serthu vaikarathu nalathu thana namaloda santhathingaluku seia vendia kadamai namaku iruku thangaloda kadasi kalathuku thevayanatha serthu than vaikanum veli natula mathiri ingaum vayasanvangaluku pension mathiri kudutha ingaum irukanvaga sambathichu nala selavu pani santhosama irupanga, ana nadakuma?

    ReplyDelete