Sunday, November 27, 2011

கல்வி எதற்கு?


நம்ம ஊர்ல படிக்கிற பசங்கள பாத்து, 'தம்பி என்ன படிக்கிறன்னு கேட்கறத விட, எதுக்குடா படிக்கிற' (பிற்காலத்தில் என்ன வேலை பார்க்கபோகிறாய்) என்ற கேள்விதான் அதிகமாகக் கேட்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான பதில்கள் டாக்டராக அல்லது என்ஜுனியர் ஆகப்போகிறேன் என்றுதான் வருகின்றன.
அப்படியானால் கல்வி எதற்கு? நன்றாகப் படிக்கவேண்டும் என்று சொல்லி வளர்ப்பது எதற்கு? பணியாற்றவா? டாக்டராக அல்லது என்ஜுனியராக பணியாற்றி கை நிறைய சம்பாதிக்கவா? இதற்கான பதிலும் ஆமாம் என்பதைப் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. அப்படியானால், கல்வி என்பது சம்பாதிப்பதற்கா?

அடிப்படையிலே, கல்வி என்பது கற்று, அறிந்து கொள்வதற்குத்தான். அதனுடைய முதன்மை நோக்கமே கற்றல்தான். அறிந்து கொள்வதுதான் கல்வியின் முதற்குறிக்கோள். முறைப்படி சிந்திப்பதற்கும், சிந்தனைகளைச் சீராக ஒழுங்குபடுத்தி, இறுதிமுடிவுக்கு வருவதற்கும் கல்வி பயன்படுகிறது என்பது மனிதஇனம் அனுபவத்தால் அறிந்துகொண்ட உண்மை. கல்வி என்பது மனிதமனங்களை ஒரிடத்தில் நிறுத்தி, ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்ல ஊன்றுகோலாக உள்ளது. 

நம் நாட்டில் காரண காரியத்திற்காகத்தான் படிப்பு என்ற நிலை தொடர்கிறது. பள்ளியில் தேர்வு எழுதவேண்டுமா? படிக்கலாம். அலுவலகத்தில் பணியில் அமர வேண்டுமா? படிக்கலாம். சும்மா எதற்காகப் படிக்கவேண்டும?; என்ற மனநிலைக் காணப்படுவதை நாம் அறிவோம். பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளும் தவிர, நம்நாட்டில் எங்காவது யாராவது படிப்பதைப் பார்க்கமுடிகிறதா? இல்லை. ஏனெனில் கல்வி என்பது தேவைக்காகக் கற்கப்படுவதாகவும், அதன் தேவை முடிந்ததும் தூக்கிஎறியப்படும் காரியமாக இருக்கிறது. 

ஆனால் மேலைநாடுகளில் பேருந்தில் செல்லும் போதும், இரயிலில் செல்லும்போதும் கூட படிக்கிறார்கள். அவர்கள் படிப்பது பாடப்புத்தகமல்ல. தேர்வுக்குச் செல்;லும் அவசர நேரத்தில் படிக்கிறவர்களுமல்ல. நேரம் கழிய வேண்டும், அதோடு இந்த நேரத்தை பயனள்ளதை அறிந்து கொள்ள பயன்படுத்தலாமே என்ற எண்ணத்தில் படிக்கிறார்கள். மேலைநாட்டினர் உலகைத் தெரிந்து கொள்ள கல்வி அவசியமென நன்கு உணர்ந்திருக்கிறார்கள். (சும்மாவா சொன்னாங்க கல்வி கண் போன்றதென்று). மேலை நாடுகளில், நன்கு ஆண்டு அனுபவித்த முதியோர்கள் கூட எதாவது வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். காரணம் கல்வி அவர்களது உலகை விரிவாக்குகிறது என்பதை தங்கள் அனுபவத்தால் உணர்ந்திருக்கிறார்கள். 

ஆனால் நம்நாட்டில், சிறுவயதிலிருந்தே கல்வி என்பது விஷத்தைப்போல வெறுத்து ஒதுக்கப்படுகிறது. பணியாற்றுவதற்கும், நன்கு சம்பாதிக்கவும் கல்வி தேவை. எனவே கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்ற மனநிலைக்; காணப்படுகிறது. உலகை அறிந்து கொள்ள கல்வி ஓர் ஆயுதம் என்ற மனநிலையில்லை. எனவேதான் கல்வி நமக்கு கசக்கிறது
நம்மிடையே இருக்கின்ற கல்வி பயிலாத பெற்றோர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு கல்வி என்பது அவசியம். அது இல்லாமல், ஒரு இடத்திற்கு செல்லவேண்டுமானால் எந்த பேருந்து என்பதை அறிந்துகொள்ள கூட பிறர் உதவியை நாட வேண்டியிருக்கிறது என்பதை தங்கள் அனுபவம் மூலம் சொல்;லிக் கொடுகிறார்கள். இப்படி கல்வி என்பது கண் போன்றது என்று சொல்ல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கணிணிக்கு எப்படி மென்பொருள் அவசியமோ, அதே போல மனிதர்களுக்குக் கல்வி அவசியம். கணிணியில் மென்பொருள் இருந்தால்தான் நாம் நினைக்கின்ற விஷயங்களைச் செய்யமுடியும். அதே போல கல்வி இருந்தால்தான் இவ்வுலகையே தெரிந்துகொள்ள முடியும். எல்லா மனிதர்களும் உடல்நிலையைப் பேணிக்காப்பது போல, பெண்கள் உடலழகைப் பேணிக்காக்க மெனக்கெடுவதைப்போல கல்விக்கும் முக்;கியத்துவம் கொடுக்கவேண்டும். அது நமது உலகை விரிவாக்கும். இப்படிப்பட்ட கல்வி, அறிவில் மட்டும் வளர்பவர்களாக இல்லாமல் சிறந்த மனிதர்களாக நம்மை உருவாக்கிறது என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

20, 30 ஆண்டுகளுக்கு முன்பு நன்கு சம்பாதிக்க வேண்டுமெனில் கல்வி தேவையென சொல்லி, கல்வி அறிவை வளர்த்தோம். இப்போது ஏறக்குறைய எல்லாரும் படிக்க வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது, படிக்கிறோம். பாராட்டுக்குரியது. இன்றைய தலைமுறையிலே ஏறக்குறைய எல்;லாருமே கல்வி கற்கின்றார்கள். இச்சூழலில்;, கல்வி என்பது பணியாற்ற மட்டும் தான், நல்லதொரு பணியிலமர்ந்ததும் தேவையில்லை என்ற தவறான கருத்தை மாற்றி, கல்வி என்பதன் முதன்மை நோக்கமே அறிந்து கொள்ளதுதான். எனவே கற்றலுக்கும், அறிந்து கொள்வதற்கும் வயதுமில்லை, காலமுமில்லை வாழ்க்கை முடிகிற வரைக்கும் கற்றுக்கொண்டே இருக்கலாம் என்ற மாற்றுச் சிந்தனையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


No comments:

Post a Comment